காரக்பூர்

சிந்து சமவெளி நாகரீக மக்கள் 900 வருடம் நீடித்த பஞ்சத்தினால் இடம் பெயர்ந்துள்ளதாக காரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவின் பண்டைய கால நாகரீகங்களில் ஒன்று சிந்து சமவெளி நாகரீகம்.   சிந்து நதிக்கரையில் இருந்ததால் சிந்து சமவெளி என பெயர் கொண்டுள்ளது.  இது குறித்து ஆய்வுகள் பல நிகழ்ந்து வருகின்றன.   உலகின் தொன்மையான நாகரீகப் பகுதியான சிந்து சமவெளியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்ததற்கான காரணங்களை காரக்பூரில் உள்ள ஐஐடி மாணவர்கள் ஆராய்ந்து தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

பேராசிரியர் அனில் குப்தா தலைமையிலான மாணவர்கள் குழுவின் இந்த ஆயவறிக்கையில், “உலகின் தொன்மையான நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகம் சுமார் 15 லட்சம் கிமீ பரப்பளவுக்கு பரவி இருந்தது.   இதில் தற்போதைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருந்துள்ளன.   அந்த காலத்தில் கட்டிட கட்டமைபு நகரின் உட்கட்டமைப்பு, உலோகவியல், வர்த்தகம் ஆகிய இனங்களில் மற்ற நாகரீகத்தை விட சிந்து சமவெளி நாகரீகம் சிறந்து விளங்கியது.

பசிபிக் கடலில் ஏற்பட்ட எல் நினோ மாற்றங்களால் தொடர்ந்து இந்தியாவில் கோடைக்கால மழை நின்றுள்ளது.    இதனால் சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளில் நீர் வரத்து முழுவதுமாக நின்று போய் உள்ளது.   சமவெளி எங்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டது.  இந்தப் பஞ்சம் சுமார் 900 வருடங்கள் தொடர்ந்துள்ளன.  அதனால்  மக்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் மாறத் தொடங்கி உள்ளனர்.

கால்நடைகளைப் பராமரிக்கவும் விவசாயம் நடத்தவும் வேறு இடங்களை நாடி செல்ல ஆரம்பித்த மக்கள் நாட்டின் தென்  பகுதிக்கும் கிழக்கு பகுதிக்கும் சென்று குடியேறி உள்ளனர்.    இதனால் ஹரப்பா, மொகஞ்சாதாரோ உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொகை குறைய ஆரம்பித்துள்ளது.   அத்துடன் ஒரு காலகட்டத்தில் அந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுமே அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ள்னர்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.