நாசிக் தொழிற்பேட்டைகள் : உற்பத்திக் குறைவால் தொழிலதிபர்கள் கலக்கம்

நாசிக்

நாசிக் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவால் தொழிலதிபர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்றான நாசிக் நகரில் அதிக அளவில் வாகன உதிரிபாகங்கள் மட்டுமின்றி பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.   நாட்டின் பல முக்கிய வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு இங்கு நடைபெறுகிறது.   இங்குள்ள தொழிற்சாலைகள் மிகப் பெரிய அளவில் இருந்து குறும் தொழில் வரை அனைத்து வகையிலும் உள்ளன.

தற்போது இந்த தொழில் நகரில் உள்ள தொழிற்பேட்டைகளில் பல தொழிற்சாலைகள்  மூடப்பட்டுள்ளன.   தற்போது வாகன விற்பனை குறைந்துள்ளதால் வாகன உதிரிப் பாக உற்பத்தி குறைந்துள்ளன.   அதே அளவில் மற்ற தொழிற்சாலைகளிலும் பணி நடைபெறாமல் உள்ளது.   இவ்வாறு அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்திக் குறைவால் பலர் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இங்கு வெல்டிங் துறையில் மிகப் பெரிய தொழிற்சாலைகளாக உள்ள சன்சுன் தொழிலகம் பணி இன்றி உள்ளது.  சன்சுன் பலவித பெரிய உடற்பயிற்சி உபகரணங்களை தயாரித்து வருகிறது.   இந்த நிறுவனத்தின் பொருட்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது   ஆயினும் இவர்கள் விற்கும்  பொருட்களுக்கான நிலுவைத் தொகை குறிப்பாக அரசுத் துறையிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை வருடகணக்கில் பாக்கி உள்ளது.

சுமார் 80 கோடி வரை வர்த்தகம் செய்து வந்த இந்த நிறுவனத்துக்கு கடந்த இரு வருடங்களாகவே தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.   இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி அமலாக்கம் என இந்த தொழிற்சாலை அதிபர் ராஜேந்திர ஜாதவ் தெரிவிக்கிறார்.   இவர் தாங்கள் ஜிஎஸ்டி குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் ஒரே விகிதத்தில் ஜி எஸ் டி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் மங்கேஷ் பதங்கர் இந்த பகுதியில் இதுவரை இவ்வளவு மோசமான நிலை வந்ததில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.   மெருகேற்றும் தொழிற்சாலை (ELECTROPLATING) நடத்தி வரும் பதங்கரின் தொழிற்சாலையில் பணியாளர்கள் 70 லிருந்து 34 ஆகக் குறைக்கப்பட்டுள்ளனர்.   அது மட்டுமின்றி வார வேலை நாட்கள் 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பேட்டையில் ஸ்கிராப்களை வாங்கி விற்கும் நிறுவனமும் இந்த வீழ்ச்சியில் இருந்து தப்பவில்லை.   இந்த ஸ்கிராப்களை வைத்து வளையல் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.  இங்கிருந்து ஸ்கிராப் உலோகங்கள் உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.  அங்குள்ள பெண்கள் இந்த உலோகங்களை உருக்கி அச்சில் ஊற்றி வளையல்களைத் தயாரிக்கின்றனர்.

இவர்களுக்கு ரொக்கத் தொகை அளிக்கப்பட்டு வந்தது.  பணமதிப்பிழப்பின்  போது ரொக்க பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதால் இந்த தொழிலும் பாதிப்பு அடைந்துள்ளது.   தற்போது நிலைமை சீரடைந்த போது இந்த வளையல் உற்பத்தியைச் செய்ய ஆட்கள் இல்லாததால் இந்த தொழில் அடியோடு அழிந்து போய் உள்ளது.