பாக்தாதியை காட்டிக் கொடுத்தவருக்கு ரூ.177 கோடி பரிசு! பழிக்குப்பழி வாங்கிய உளவாளி! வெளிவராத தகவல்

வாஷிங்டன்: அல்கொய்தாவுக்கு பிறகு, பெரியண்ணன் அமெரிக்காவை ஆட்டி படைத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அல் பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

உலகளவில் பின்லேடனுக்கு பிறகு மிகப்பெரிய தீவிரவாதியாக உருவெடுத்தவர் அல் பாக்தாதி. ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர். சிரியாவில் நடந்த தாக்குதலில் பாக்தாதி மரணமடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

அல்பாக்தாதியின் இருப்பிடம் எப்படி அறியப்பட்டது? யார் அதற்கு உதவி செய்தது என்ற சுவாரசிய தகவல்கள் இப்போது வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. அவரை காட்டிக் கொடுத்த உளவாளி யார் என்று அமெரிக்க அதிகாரிகள் சொல்ல மறுத்தாலும் தகவல்கள் நின்றபாடில்லை.

சிரியாவில் உள்ள பாக்தாதி வீட்டின் கட்டுமானப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் தான் அந்த உளவாளி. தவிர, பாக்தாதியின் குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை அல்லது பரிசோதனைகளுக்கு செல்லும் போது பாதுகாப்பாக உடன் சென்றிருக்கிறார்.

மேலும், வீட்டில் உள்ள அறைகள், யார் எங்கு இருப்பார் என்ற தகவல்களை அந்த  உளவாளி துல்லியமாக அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறார். எங்கு சென்றாலும், பெல்ட் பாம் அணிந்தவாறே பாக்தாதி செல்வார் என்ற முக்கிய தகவலையும் அந்த உளவாளி அமெரிக்க ராணுவத்திடம் பகிர்ந்திருக்கிறார்.

பாக்தாதி கொல்லப்பட்ட போதும் அங்கேயே அந்த உளவாளி இருந்திருக்கிறார். அதன்பிறகு, 2 நாட்கள் கழித்து அவர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டிருக்கிறார். முக்கிய தகவல்களை வழங்கிய அந்த உளவாளிக்கு பரிசாக 25 மில்லியன் டாலர்களை வழங்குகிறது அமெரிக்கா.

உளவாளியாக அறியப்பட்டவர், சன்னி பிரிவைச் சேர்ந்தவர் என்றும், அவரது உறவினரை ஐஎஸ் அமைப்பினர் கொன்றதால் காத்திருந்து இந்த பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து அமெரிக்காவின் ராணுவ தலைமை அதிகாரி மார்க் மில்லி கூறியிருப்பதாவது: இந்த தாக்குதல் திட்டத்தின் சிரிய ஜனநாயக படையினர் பங்களிப்பு குறித்து நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தாக்குதலின் நோக்கம், பாக்தாதியை கொல்வது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது அமெரிக்கவே தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார்.

கார்ட்டூன் கேலரி