பாஜக அமைச்சர் தொகுதிக்கு செய்த பணிகள் என்ன? : தகவல் ஆணையர் கேள்வி

டில்லி

தொகுதி நிவாரண நிதியில் இருந்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்த பணிகள் குறித்த விவரங்களை தகவல் ஆணையர் கேட்டுள்ளார்.

குவாலியர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் பாஜகவை சேர்ந்த நரேந்திர சிங் தோமர்.  இவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இடம் பெற்றுள்ளவர்.   இவர் தனது பாராளுமன்ற  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து என்ன செலவு செய்துள்ளார் என்பது குறித்தும் எந்தெந்த பணிகளை செய்துள்ளார் என்பது குறித்தும் தகவல் ஆணையர் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் அதுவும் அமைச்சராக உள்ளவரிடம் இவ்வாறு கேட்பது இதுவே முதல் முறை என்பதால் இது குறித்து செய்தியாளர்கள் தகவல் ஆணையரிடம் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.  அதற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, “ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.   அவர்கள் ஒன்று சேர்ந்து சட்டங்களை மாற்றலாம்.  ஆனால் சட்டத்தை மீற முடியாது.

அனைத்து உறுப்பினரும் தன்னை தேர்ந்தெடுத்த மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.   ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசு  ரூ. 5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி அளிக்கிறது.   அது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.   அதை எந்த ஒரு பணிக்கும் செலவு செய்ய உறுப்பினருக்கு உரிமை உள்ளது.   ஆனால் அதை எதற்கு செலவிட்டோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்னும் கடமையும் இருக்கிறது.

அமைச்சரிடம் இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற முயற்சி செய்தோம்.  ஆனால் உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் இல்லை எனவும் இந்த சட்டத்தின் கீழ் தகவல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.   ஆகையால் நாங்கள் இது குறித்த தகவலை நேரடியாக கேட்டுள்ளோம்.  அவரால் அதை தர முடியவில்லை எனில் அவருடைய அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட வேண்டும்” என கூறி உள்ளார்.