ஊழியர்களை அழைத்துவர தனிவிமானம் ஏற்பாடு செய்த இன்ஃபோசிஸ்!

--

பெங்களூரு: அமெரிக்காவில் சிக்கியிருக்கும் தனது 200 ஊழியர்களை இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டுவரும் வகையில், தனி விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.

“சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படும் தனி விமானம், பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு வந்தடையும்” என்று தெரிவித்தார் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான சமீர் கொசாவி.

அமெரிக்காவில் சிக்கியிருக்கும் இன்ஃபோசிஸ் ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோடி அரசு அறிவித்த ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலமாக, விமான டிக்கெட் பெறுவது கடினமாக உள்ளது என்பதால், தனி விமானத்தை ஏற்பாடு செய்யுமாறு ஊழியர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

“இக்கட்டான நிலையிலுள்ள மற்றும் ஏற்கத்தகுந்த காரணங்களைக் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே, இந்த விமானத்தில் ஊர்திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நாடு திரும்ப விருப்பமாக உள்ளனர். ஆனால், விதிமுறைப்படி அவர்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது” என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கான வருவாயில் 60% அமெரிக்காவிலிருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக, H-1B விசா பயன்பாட்டை 60% என்ற அளவில் குறைத்துள்ளது அந்நிறுவனம்.