பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் அமைப்பான இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன், பிரகாஷ் படுகோன் பேட்மின்டன் அகடமியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பிரகாஷ் படுகோன் அகடமியைச் சேர்ந்த திறமையான பேட்மின்டன் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திறம்பட செயல்படும் வகையில் அவர்களுக்கான தரமான பயிற்சிக்கு உதவி செய்யும் பொருட்டே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறந்த திற‍னுடைய பேட்மின்டன் வீரர்கள், ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் பதக்கம் வெல்வதை உறுதி செய்வது இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு நாடாக நாம் விளையாட்டை விரும்புகிறோம். ஆனால், ஒருங்கிணைந்த மற்றும் பொருத்தமான ஒத்துழைப்பு கிடைக்காத காரணத்தால், மிகத் திறமையான, சாதிக்கும் வாய்ப்புகளைக் கொண்ட விளையாட்டு வீரர்களாலும் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது.

எனவே, இத்தகைய குறைபாடுகளைக் களைந்து, திறமையானவர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்குவதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார் இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் தலைவர் சுதா மூர்த்தி.