வளர்ச்சியின் நாயகர்கள் – யாரைப் புகழ்கிறார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

பெங்களூரு: இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணமானோர் நரசிம்மராவ், மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட நால்வர்தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான நாராயண மூர்த்தி.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 1980களில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை துவக்கியபோது நாட்டில் எந்த தொழில்நுட்ப புரட்சியும் நிகழ்ந்திருக்கவில்லை. ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கு 7 ஆண்டுகள் ஆனது. முன்னுரிமை அடிப்படையில்தான் தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படும்.

ஒருமுறை தகவல்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சி.எம்.ஸ்டீபனிடம் சிலர் சென்று தங்களின் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை என்று புகாரளித்ததற்கு, “பரவாயில்லை, அப்படி ஒன்று உங்களிடம் இருப்பதாக சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தற்போது பிரதமர் இந்திரா காந்தியின் தொலைபேசியே வேலை செய்யவில்லை” என்று அவர் கூறியதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்.

இது இப்படியென்றால், சுமார் 100000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு கணிப்பொறியை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால், டெல்லிக்கு 50 தடவைகள் பயணம் செய்து, அதே 100000 அமெரிக்க டாலர் செலவழித்திருக்க வேண்டும். அன்றைய நிலையில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.6.2 என்பதாக இருந்தது.

வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென்றாலும் ஆர்பிஐ -யிடம் விண்ணப்பம் செய்து 3 வாரங்கள் காத்திருக்க வேண்டும். அப்போது ஒருவேளை சாதகமான பதிலைப் பெறலாம். இந்த நிலைமைகள் மாறாத என்று ஏங்கி கிடந்திருக்கிறோம்.

ஆனால், அந்த மாற்றமும் ஒருநாள் நடந்தது. நரசிம்மராவ், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் மற்றும் மாண்டேக்சிங் அலுவாலியா ஆகியோர் அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். கடந்த 45 ஆண்டுகளாக முடியாததை ஒரேவாரத்தில் செய்து முடித்தார்கள். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை சாத்தியமாக்கினார்கள்” என்று புகழ்ந்துள்ளார் நாராயண மூர்த்தி.

கார்ட்டூன் கேலரி