பிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்! – கணவரை சூழ்ந்த சர்ச்சை!

லண்டன்: பிரிட்டனில் வேந்தராக பதவி வகிக்கும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக், தனது மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்சதா மூர்த்தியின் முழுமையான சொத்து மதிப்பை வெளியிட தவறியதற்காக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பிரிட்டனின் ‘த கார்டியன்’ பத்திரிகை, இதுதொடர்பாக புலனாய்வு செய்து, ரிஷி சுனக் உண்மையை மறைத்த விஷயத்தை வெளியிட்டது.

அக்சதா மூர்த்தியின் சொத்து மதிப்பு, இந்திய மதிப்பில் ரூ.4200 கோடிகளாகும். இது, பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பான ரூ.3400 கோடியைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் நாட்டு சட்டத்தைப் பொறுத்தவரை, அந்நாட்டு அமைச்சர்கள் அனைவரும், தங்களது நெருங்கிய உறவினர்களுடைய சொத்து மதிப்பை வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்பது விதி.

ஆனால், அமைச்சர் அந்தஸ்தில் உள்ள ரிஷி சுனக் தன் கடமையிலிருந்து தவறிவிட்டார் என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர், தனது மனைவி தொடர்பான சாதாரண ஒரு சொத்து மதிப்பு விபரத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

அக்சதா மூர்த்தி, தனது தந்தையின் நிறுவனமான இன்போசிஸ் நிறுவன குழுமத்தில், கணிசமான பங்குகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் நிறுவனம், பிரிட்டன் அரசின் ஒப்பந்ததாரர் என்பதும் கூடுதல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.