இனிமேல் உள்நாட்டிலேயே பெருங்காய உற்பத்தி – இமாச்சலில் முதல் முயற்சி!

புதுடெல்லி: பெருங்காய விளைச்சல் இதுவரை உள்நாட்டில் மேற்கொள்ளப்படாதிருந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் அதை விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு, பொதுவாக பெருங்காயமானது ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்திய உணவில் பெருங்காயம் என்பது மிக முக்கியமானது என்பதை நாம் அறிவோம்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தைச்(சிஎஸ்ஐஆர்) சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியின் மூலம் எதிர்காலத்தில், பெருங்காயப் பயிரிடல் என்பது இந்தியாவில் சாதாரண ஒன்றாக மாறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகளவில் உற்பத்தியாகும் பெருங்காயத்தில், 40% அளவிற்கு இந்தியாவே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், அதை உள்நாட்டிலேயே விளைவிக்கும் முயற்சி இதுவரை தொடங்கப்படாமலேயே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளாத நபர்கள், பெருங்காயத்தைப் பெரியளவில் சேர்த்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.