லண்டன்: ஆஸ்திரேலிய அணியில் பேட்ஸ்மேன் உஸ்மான் குவாஜா காயமடைந்து வெளியேறியுள்ளதால், அவரின் இடத்தை பீட்டர் ஹேன்ட்ஸ்காம்ப் நிரப்பவுள்ளார் என்று தெரிவித்தார் அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

பீட்டர் ஹேன்ட்ஸ்காம்பிற்கு இதுதான் முதல் உலகக்கோப்பை போட்டியாகும். அவர், ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என்று சிலர் கூறினாலும், அது நடக்கவில்லை. இந்நிலையில் உஸ்மான் குவாஜாவின் மூலமாக அவர் தனது வாய்ப்பைப் பெறுகிறார்.

மேலும், இங்கிலாந்திற்கு எதிரான மிக முக்கியமான அரையிறுதிப் போட்டியில் ஆடுகிறார். முதலில், இவர் காயமடைந்த ஷான் மார்ஷுக்கு பதிலாக அறிவிக்கப்பட்டிருந்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் குவாஜா காயமடைந்தது நமக்கு நினைவிருக்கலாம்.

இந்த உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணி மொத்தம் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. புள்ளிப் பட்டியலில் மூன்றாமிடம் பெற்ற இங்கிலாந்துடன் இரண்டாவது அரையிறுதியில் மோதுகிறது.