குழந்தை கடத்தல்காரி என புரளி!! அப்பாவி பெண் அடித்து கொலை

கொல்கத்தா:

குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் அப்பாவியான மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

மேற்குவங்க மாநிலம் செகந்திரா கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகள் சில காணமல் போய் வந்தனர். இந்த நிலையில் 42 வயது மதிக்க தக்க பெண் அந்த கிராமத்தின் திலீப் கோஷ் என்பவரது வீட்டின் அருகே பதுங்கி பதுங்கி சென்று கொண்டு இருந்தார். அவரது கையில் எதையோ மறைத்து எடுத்து சென்றுள்ளார். இதை பார்த்த கிராம மக்கள் சத்தம் போட்டு கும்பலாக கூடினர்.

கும்பலாக சென்று அந்த பெண்ணை இரக்கமின்றி அடித்தனர். பின்னர் அவரை ஒரு டிராக்டரில் கட்டி வைத்தனர். சில வாலிபர்கள் அந்த பெண்ணின் ஆடையை அவிழ்த்து அரை நிர்வாணமாக்கினர். பின்னர் அந்த பெண்ணின் தலையை மொட்டை அடித்தனர். அந்த பெண் தன்னை குற்றமற்றவள் என கூறி உள்ளார். ஆனால் யாரும் கேட்கும் மன நிலையில் இல்லை. கும்பலின் தொடர் தாக்குதலில் காயம் காரணமாக அந்த பெண் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘‘ குழந்தையை கடத்தி செல்ல பெண் வந்துள்ளார் என்ற வதந்தி பரவியது. கும்பலாக வந்து அந்த பெண்ணை அடித்துள்ளனர். இதனால் அந்த பெண் மரணமடைந்து உள்ளார். அந்த பெண் மனநிலை பாதிகப்பட்டவர். அவர் பெயர் ஒட்டேரா பிபி. இது குறித்து கொலை வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கிய கிராமத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.