சென்னை :

தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் தி.மு.க. சார்பில் “கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் மாரத்தான்” போட்டி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இணையதள வாயிலாக உலகம் முழுக்க எங்கிருந்து வேண்டுமானாலும் பங்கேற்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டியை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்பும் நபர்கள் தங்களைப்பற்றிய விவரங்களை www.kalaignarmarathon.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பின்னர் தங்கள் மொபைலில் ரன் கீப்பர், ஸ்ட்ராவா, ரன்டஸ்டிக், க்ராமின், கோமூட் ஆகிய செயலிகளில் ஏதாவது ஒரு செயலியில் தாங்கள் ஓடிய தூரம் மற்றும் கால அளவை பதிவு செய்து அதனை பதிவேற்றினால், அவர்கள் ஓடிய கால அளவை கொண்டு பரிசுகள் அளிக்க பட இருப்பதாக அறிவித்திருக்கிறது.

5 கி.மீ., 10 கி.மீ., 15 கி.மீ., என மூன்று பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டிக்கு சென்னை மாநகர முன்னாள் மேயர் மா. சுப்ரமணியன் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் போட்டியாளர்கள் ஆகஸ்ட் 7 முதல் 31 வரையிலான 25 நாள் காலகட்டத்திற்குள் அவரவர் இருக்கும் பகுதியில் உள்ள ஊரடங்கு மற்றும் தளர்வுகளுக்கு ஏற்றவாறு பொதுவெளியிலோ அல்லது அவர்கள் வீட்டில் இருந்தபடியோ இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. வினரின் இந்த நூதன மெய்நிகர் மாரத்தான் போட்டி இளைஞர்களிடையே  வரவேற்பைப் பெற்றுள்ளது.