அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ‘பிங்க்’ இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் ஜூன் 12 அன்று நேரடியாக வெளியாகிறது என தகவல் வெளியானது .
இதை படக்குழுவினர் நேற்று உறுதி செய்திருந்தனர்.இந்த அறிவிப்புக்கு ஐநாக்ஸ் திரையங்க குழுமம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐநாக்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-

தங்கள் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஒரு தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பை பற்றி ஐநாக்ஸ் நிறுவனம் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த விரும்புகிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலகளாவிய திரைப்பட வெளியிடலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கங்களுக்கும் எப்போதும் ஒரு பரஸ்பர புரிதல் இருந்தே வந்துள்ளது. இதில் ஒருவருடைய நடவடிக்கைதான் இன்னொருவரது வருவாய்க்கு வழிவகுக்கும். நல்ல படங்கள் அதிகமான வரவேண்டும் என்பதற்காக நாடு முழுக்க உலகத் தரம் வாய்ந்த திரைகளை ஐநாக்ஸ் நிறுவியுள்ளது. பல்லாண்டுகாலமாக நீடித்து வரும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உதவி வந்துள்ளது. ஒருவரோடு ஒருவர் தோள் நின்று திரைத்துறையை மீட்டெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் சில பங்குதாரர்கள் இந்த பரஸ்பர உறவுமுறையில் ஆர்வமில்லாமல் செயல்படுவது வருத்தமாக உள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கவேண்டிய தயாரிப்பாளர்கள், ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகிறார்கள். இது போன்ற நண்பர்களால் ஐநாக்ஸ் நிறுவனம் தன்னுடைய தேர்வுகளை ஆராய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறது.


அனைத்து தயாரிப்பாளர்களையும் திரையரங்க வெளியிடலை தவிர்க்காமல், பழைய நடைமுறையையே தொடருமாறு வலியுறுத்துகிறது. அதுவே இந்த சங்கிலி தொடரில் இருக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் நல்லது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.