சென்னை:

மிரிண்டா குளிர்பானத்தில் பூச்சி இருந்த விவகாரம் தொடர்பாக பெப்சிகோ நிறுவனத்திறகு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தளபதி கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை பாரில் மிரிண்டா குளிர்பானம் வாங்கினார். அதில் செத்துப் போன பூச்சி ஒன்று மிதந்தது. இதையடுத்து, நுகர்வோர் தீர்ப்பாயத்தில் பெப்ஸிகோ மற்றும் டாஸ்மாக் பார் மீது தளபதி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த சம்பவத்தில் நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, எனவே அவருக்கு இழப்பீடு அளிக்க முடியாது என்று பெப்சிகோ வாதாடியது. குளிர்பானத்தின் மூடி திறக்கப்படாமல் இருந்ததால் இதில் டாஸ்மாக் பார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

நுகர்வோர் உடலளவில் பாதிக்கப்படவில்லை என்பதைக் கூறி பெப்சி கோ நிறுவனம் தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட முடியாது. உணவு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அந்த நிறுவனத்தின் பொறுப்பு.

செத்துப் போன பூச்சி இருந்த குளிர்பானத்தை வாங்கிக் குடித்த தளபதிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடும், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரமும் அடுத்த 6 வார காலத்துக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.15 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.