ங்கரன்கோவில்:

ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள நகைக்கடைக் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு ஒரு தனிப்படைசென்றது. அப்போது அந்தப் படையில் இருந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராஜஸ்தானில் பலியானார்.  ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பரிசோதனை முடிந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

சென்னை விமான நிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பெரியபாண்டியன் உடலுக்கு காவல்துறையின் உரிய மரியாதை தரப்பட்டது.   அதன் பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

பின்பு பெரிய பாண்டியன் உடல் மதுரைக்கு அனுப்பப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஐ.ஜி சைலேஷ் குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தியனர்.  அதற்குப் பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.   வேன் மூலம் சங்கரன்கோவில் அருகே உள்ள மூவிருந்தாளி சாலைப் புதூருக்கு கொண்டு செல்லப்பட்ட பெரியபாண்டியன் உடலுக்கு அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் தலைவர்களான மதிமுக பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் பல காவல்துறை உயர் அதிகாரிகளும் பெரியபாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பெரியபாண்டியன் உடல் நள்ளிரவில் அவரது சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பெரியபாண்டியன் உடல் முன்னே செல்ல காவல்துறையினர் அணிவகுக்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீரப்புதல்வனுக்கு கண்ணீரும் கம்பலையுமாக வீரவணக்கம் செலுத்தியபடி பின் தொடர்ந்தனர்.

அதிகாலை 1.15 மணியளவில் பெரிய பாண்டியின் சொந்த நிலத்துக்கு அவரது உடல் வந்து சேர்ந்தது. போலீசாரின் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழுமையான அரசு மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும் தீரன் பெரியபாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது