உ.பி. பசுவதை எதிர்ப்பு போராட்டத்தில் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர்: முகமது அலாக் வழக்கை விசாரித்தவர்

புலந்த்சாகர், உத்திரப் பிரதேசம்

சுவதைக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் சிங் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

நேற்று உத்திரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் ஒரு பசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பசுவதையை எதிர்த்து இந்து அமைப்புக்கள் சாலை மறியல் போராட்டத்தில் கொல்லப்பட்ட பசுவின் உடலுடன் ஈடுபட்டன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அத்துடன் அங்கு வந்த காவல்துறையினர் மீது கல்லெறி தாக்குதல் நடைபெற்றது. பல காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதை ஒட்டி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். கல்லெறி தாக்குதலில் காயம் அடைந்த காவல்துறை ஆய்வாளர் சுபோத்குமார் சிங் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் போது மரணம் அடைந்துள்ளார். துப்பாக்கி சூட்டில் சுமித் என்னும் இளைஞர் கொல்லப்ப்பட்டுள்ளார்.

இந்த செய்தி அங்கு பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. கொல்லப்பட்ட ஆய்வாளர் கட்ந்த 2015 ஆம் வருடம் நடந்த முகமது அக்லக் வழக்கை விசாரித்தவர் ஆவார். முகமது அக்லக் பசுவைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தவர் ஆவார். இந்த வழக்கில் அக்லக் வைத்திருந்தது பசுவின் மாமிசம் அல்ல என்பதை கண்டறிய உதவியவர் சுபோத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மற்றொரு பசுவதை வழக்கு கலவரத்தில் இவர் கும்பலால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துளார்.

மரணம் அடைந்த சுபோத் குமார் உடலில் ஒரு துப்பாக்கி குண்டு காயமும் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதைத் தவிர ஒரு கூரான பொருளால் அவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலை உத்திரப்பிரதேச சட்டம் ஒழுங்கு காவல்துறை உயர் அதிகாரி ஆனந்த் குமார் உறுதி செய்துள்ளார்.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சுபோத் குமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.   அத்துடன் சுபோத் குமார் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 50 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்