சென்னை:

ளியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து துப்புக்கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்து உள்ளது.

நேற்று முன்தினம், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில்  ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர்  வில்சன் தலைமையிலான போலீசார் பணியில் இருந்தனர். அப்போது, காரில் வந்த மர்மநபர்கள் இன்ஸ்பெக்டர் வில்சன் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் யார் என்பது குறித்து,  அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியின் பதிவுகளை பெற்று ஆய்வு நடைபெற்றது. அதில், 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கேரளா வழியாக சென்றிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குற்றவாளிகளை பிடிப்பது  குறித்து தமிழக டிஜிபி திரிபாதி, கேரள மாநில டிஜிபியுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் செய்தியளார்களிடம் பேசிய கேரள டிஜிபி போலோநாத், இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இந்த நிலையில், வில்சனை சுட்டுக்கொன்ற குற்றவாளிகள்  குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.