பா.ஜ.க.வில் சேர்ந்தால் சுடச்சுடப் பதவி..

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பா.ஜ.க. ஆட்சி உருவானது.
தலைவராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்றுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்த  22 எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மந்திரிகளாக ஆக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரத்யுமனா சிங் லோதி என்ற எம்.எல்.ஏ. நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தற்காலிக சபாநாயகர் சர்மா உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
பின்னர் பா.ஜ.க.வில் இணைந்த அந்த எம்.எல்.ஏ. லோதி, முதல்வர்   சவுகானைச் சந்தித்துப் பேசினார்.
கொஞ்ச நேரத்தில் ’’லோதி, மத்தியப்பிரதேச மாநில உணவுப்பொருள் வழங்கல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்ற அறிவிப்பு அரசு தரப்பில் வெளியிடப்பட்டது.
இந்த பதவி காபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரானது.
காபினெட் அந்தஸ்துள்ள பொறுப்பு கிடைத்த சிறிது நேரத்தில்’’ எனக்குப் பதவி முக்கியமல்ல.. மக்கள் சேவையே பிரதானம்’’ எனப் பேட்டி அளித்துள்ளார், பா.ஜ.க.வில் சேர்ந்த லோதி.
-பா.பாரதி.