ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை படாதப்பாடு படுத்தி வருகிறது. உலக பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனாலும் சீனா, அமெரிக்கா, கனடா என பல நாடுகள் மக்களின் பொருளாதார பிரச்னையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.
அதன்படி, கனடா அரசானது அந்நாட்டு மக்களின் வேலைக்கு உறுதி அளித்தது. எந்த நிறுவனமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதோடு,  கொரோனா அவசரகாலத்தை எதிர்கொள்ள 82 பில்லியன் டாலரை கனடா அரசு ஒதுக்கியது.
கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் போன்ற அத்யாவசிய பணியாளர்கள் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிகளை பாராட்டும் விதமாக கனடா அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. அதற்காக அந்நாட்டு அரசு மாகாணங்கள், பிரதேச அரசுகளிடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அந்த ஒப்பந்தம்படி, 300 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்மூலம் அத்யாவசிய பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதத்துக்கு 1,800 டாலர்( இந்திய ரூபாய் மதிப்பில், 1,35,000 ரூபாய்) வழங்க நடவடிக்கை எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவர பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பு பணியில் உயிரைப் பயணம் வைத்து பணியாற்றுகின்றனர். இந்த வேலைக்கு அவர்கள் பெறும் ஊதியம் குறைவு. எனவேதான் சம்பள உயர்வை அறிவித்துள்ளோம். அரசின் சம்பள உயர்வுக்கு அத்யாவசிய பணியாளர்களே தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளார்.