சென்னை :

ல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட இவரோ இவரது குடும்பத்தினரோ சந்திக்காத கஷ்டத்தை தற்போது வீடுதிரும்பியதும் சந்தித்துவருகிறார்கள்.

வீடு திரும்பியவரைத் தனிமைப் படுத்துவதற்காக வந்த நகராட்சி ஊழியர்கள், இவர்கள் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாயிலில் யாரும் செல்ல முடியாத படி மூட முற்பட்டனர், இதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த குறிப்பிட்ட வீட்டிற்கு மட்டும் யாரும் செல்ல முடியாதபடி தகரத்தை வைத்து மூடிவிட்டுச் சென்று விட்டனர்.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எந்த நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிர்வாகம், அவர் வீடு திரும்பியதும், காற்று கூட புகமுடியாத அளவுக்கு மூடியதால், அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் இந்த வீட்டில் வசிப்பவர்கள் நலன் கருதி இதனை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினர், மேலும் இது குறித்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனர்.

இதை அறிந்து வந்த நகராட்சி நிர்வாகத்தினர், தேவயானைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள மேலே கை நுழையும் அளவுக்கு இடைவெளி விட்டு மூட சொல்லி சென்று விட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், தாங்கள் சுகாதாரத் துறை வழிகாட்டுதல் படியே நடப்பதாகப் பதிலளித்துள்ளனர்.

சிகிச்சைக்குப் பின் நெகடிவ் எனக் கூறி வீடு திரும்பிய இந்த நபரின் வீட்டில் மொத்தம் நான்கு பேர் வசிப்பதாகவும் அதில் ஒருவருக்கு இதயக் கோளாறு இருப்பதாகவும் கூறும் இவர்கள், தங்களை இப்படி அடைத்து வைத்திருப்பதால், ஏதாவது ஆபத்து நடந்தால் தாங்கள் எப்படி வெளியேறுவது என்று செய்வதறியாமல் அச்சத்துடன் உள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரே தெருவில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானால் அந்த தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக கூறி தடுப்பு ஏற்படுத்தினர், தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்புகள் அமைக்கின்றனர், ஒவ்வொரு வீட்டிற்கும் தடுப்பு அமைப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று அருகில் உள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.