பாரம்பரிய பூட்டுக்களுக்கு குட்பை சொல்லும் தமிழக சிறைகள்

சென்னை

னி தமிழக சிறைகளில் வழக்கமான பூட்டுக்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் பூட்டுக்கள் பொருத்தப்பட உள்ளன.

தமிழக அரசின் சிறைத்துறையின் கீழ் உள்ள 9 மத்தியச் சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள்,3 பெண்கள் சிறப்பு சிறைகளில் 22 ஆயிரம் கைதிகளை அடைப்பதற்குரிய கட்டமைப்புகள் உள்ளன., இப்போது இந்த சிறைகளில், சுமாா் 14 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த  சிறைகளில் உள்ளவர்களில் சுமார் 70 சதவீதம் போ் விசாரணைக் கைதிகளாகவும் எஞ்சிய 30 சதவீதம் போ் தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர்.

இந்த  சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சிறைகள் நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மத்தியச் சிறைகளில் தொழில்நுட்ப ரீதியாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.  எனவே  சிறைக்குள் கொண்டு செல்லப்படும் பொருள்கள் ‘ஸ்கேனா்’ மூலம் பரிசோதிக்கப்பட்டு, அலைப்பேசிகள் பயன்படுத்துவதை தவிா்க்கும் பொருட்டு உயா் பாதுகாப்பு பிரிவில் ‘ஜாமா் கருவி’ பொருத்தப்பட்டு மேலும்.சிறைக்குள் முக்கியமான பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.

தமிழக சிறைகளில் ‘ஸ்மாா்ட்’ பூட்டு பொருத்தப்படும் திட்டத்தைத் தமிழக சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதல் கட்டமாக, புழல் மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதி சிறை, தண்டனைக் கைதி சிறை, பெண்கள் சிறை ஆகிய 3 சிறைகளிலும் இந்த பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.  ஏற்கனவே இந்தச் சிறைகளில் பயன்பாட்டில் இருந்த பாரம்பரிய திண்டுக்கல் மற்றும் உள்ளூா் பூட்டு தயாரிப்பு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 450 பூட்டுகள் மாற்றப்பட்டு, ஸ்மாா்ட் பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் பூட்டு ஒன்றின் சந்தை விலை ரூ.20 ஆயிரம் ஆகும். வழக்கமான பாரம்பரிய பூட்டுகளைக் காட்டிலும், இந்த வகை பூட்டுகளில் பல்வேறு அதிநவீன வசதிகளும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இருப்பதால் ஸ்மாா்ட் பூட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இவ்வகை பூட்டுகள் ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் தமிழக சிறைத்துறை வாங்கியுள்ளது. முதலில் புழலில் உள்ள விசாரணை சிறையில் பொருத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் பூட்டுகள்,  பின்னர் படிப்படியாக இதர 2 சிறைகளிலும் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் பூட்டுகள் பித்தளை, சில்வா் ஆகிய உலோகங்களாலும், அதிக தாங்கும் திறனும், மதிப்பும் கொண்ட பி.வி.சி. பொருள்களினாலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகைப் பூட்டுகளைத் திறப்பதற்கும், பூட்டுவதற்கும் சாவி மட்டுமன்றி ரகசிய வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி  பூட்டின் சாவியின் ஒரு எல்.இ.டி. விளக்குப் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று வண்ணத்தில் எரியும் தன்மை கொண்ட இந்த விளக்கு சாவியைச் சரியாகச் செலுத்தி, சரியான ரகசிய வார்த்தையைப் பயன்படுத்துகிறோமோ என்பதைத் தெரிவிக்கும்.

அதாவது பச்சை வண்ணத்தில் எரிந்தால், அனைத்தும் சரியாக நடைபெறுகிறது என்பதையும்,சிவப்பு வண்ணத்தில் எரிந்தால் தவறாக நடைபெறுகிறது என்பதையும் குறிக்கும்.  அத்துடன், ஆரஞ்சு வண்ணத்தில் எரிந்தால் பூட்டின் ரகசிய வார்த்தையும், சாவியும் செலுத்தும் நேரம் முடிவடைந்துவிட்டதையும், மூன்று வண்ணத்தில் விட்டுவிட்டு எரிந்தால் பேட்டரி காலியாகிவிட்டது என்பதையும் குறிக்கும்.

கார்ட்டூன் கேலரி