கள ஆய்வு இன்றி சிறந்த கல்வி நிறுவனங்கள் தேர்வு….ஜியோ விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்

டில்லி:

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 3 அரசு பல்கலைக்கழகங்களும், 3 தனியார் கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றிருந்தன. இவ்வாறு தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.

 

இந்த வகையில் 3 தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ கல்வி நிறுவனமும் இடம்பெற்றிருந்தது. கட்டடம் கூட இல்லாத ஜியோ கல்வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, யூஜிசி.யின் தேர்வு முறையில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இந்த பட்டியலை தேர்வு செய்ய யூஜிசி சார்பில் அதிகாரமிக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக கோபாலசாமி உள்ளார். ஜியோ கல்வி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த தேர்வு குழுவுக்கு விண்ணப்பித்த 113 தனியார் கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் மீது முறையான ஆய்வு நடந்திருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யூஜிசி.யில் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தான் சிறந்த கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தர வரிசை பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்களுக்கு வல்லுனர் குழு கள ஆய்வு அல்லது அட்டவணை தர வரிசையை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த இரண்டையும் குழு மேற்கொள்வது கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

113 விண்ணப்பங்களை 45 முதல் 50 நாட்களில் குழு ஆய்வு செய்துள்ளது. குறிப்பாக அவர்களது விண்ணப்பம் மற்றும் அவர்களின் விளக்கப்படம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்துடன் 8 தனித்தனி நாட்களில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 8 ம் தேதி வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பிப்ரவரி மாதத்தில் யூஜிசி வெளியிட்டது. குழு தனது அறிக்கையை மே இறுதியில் சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து கோபால்சாமி கூறுகையில்,‘‘ கள ஆய்வு என்பது கட்டாயம் கிடையாது. அதனால் கள ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. அது அவசியம் என்று எங்களுக்கு தோன்றவில்லை. 113 நிறுவனங்களுக்கும் ஆய்வு செய்தால் ஒரு வருடமாகும். சமயங்களில் சில நிறுவனங்களுக்கு இடையிலான வேறுபாடு மிக துல்லியமான அளவில் இருக்கிறது. அதை தர வரிசைப்படுத்துவது என்பது கடினமான காரியமாக உள்ளது.

சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் நேரில் அழைக்கப்பட்டு 10 முதல் 15 நிமிடம் வரை விளக்கம் அளிக்க அனுமதி வழங்கப்படும். அப்போது குழுவினரில் கேள்விகள், சந்தேகங்களுக்கு அவர்கள் விளக்கம் அளிப்பார்கள். அனைத்து தேர்வு முறையும் வெளிப்படையாக தான் நடந்தது’’என்றார்.

You may have missed