மேற்கு வங்கத்தில் பரபரப்பு: தலைமைச் செயலக கேட் பூட்டப்பட்டதால் மாநில ஆளுநர் பரிதவிப்பு

கொல்கத்தா:

மேற்கு  வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார், இன்று சட்டப்பேரவை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வருவதாக கூறிய நிலையில், தலைமைச்செயலக கேட் பூட்டப்பட்டிருந்தால், அவர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.  மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்பட மோடி அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அங்கு தற்போது மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  ஆளுநர் ஜெகதீப் தங்கார், இன்று மேற்கு வங்கத் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை யில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்ய விரும்புவதாக மாநில சபாநாயகர் பிமன் பானர்ஜிக்கு நேற்று தகவல் அனுப்பி இருந்தார்.

இதைத்தொடர்ந்து,  சட்டப்பேரவையை  இரண்டு நாட்களுக்கு ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் சென்று விட்டார். இந்த நிலையில்,  இன்று காலை  தலைமைச் செயலகம் வந்த, அவர் செல்லும் கேட் எண்–3 திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்தது.

இதனால், சிறிது நேரம் காத்திருந்த அவர், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,  மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டிருந்தாலும் கேட்டை திறக்கக்கூடாது என்று விதி ஏதும் இல்லை.. இது ஜனநாயக வரலாற்றில் இது அவமானகரமானது என்று கடுமையாக  விமர்சித்தார்.

மாநிலத்தின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான பைல்களில் ஆளுநர் கையெழுத்திட மறுத்து வருவதாகவும், சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுத்து வருவதாலும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான, சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, கேட் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையாகி உள்ளது.