சென்னை:
றைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் தீவிர முயற்சியின் விளைவாக 2003இல் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொதுத்துறை நிறுவனங்களை – புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால் இந்த பாஜக அரசுக்கு இருக்கின்ற நிறுவனங்களைக் கலைப்பதோ, தனியாருக்கு விற்பதோ மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சியாக இருந்த மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் தீவிர முயற்சியின் விளைவாக 2003இல் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது. இங்கு சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்த அந்தத் தீர்ப்பாயம் – காப்புரிமை, பதிப்புரிமை, புவிசார் குறியீடு தொடர்பானவற்றில் மிக முக்கியப் பங்காற்றியது. ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் – தமிழ்நாட்டின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் இந்தத் தீர்ப்பாயத்தைக் கலைத்துள்ளது மத்திய பாஜக அரசு. இத்தீர்ப்பாயம் மட்டுமல்ல – இன்னும் பிற ஏழு தீர்ப்பாயங்களையும் கலைத்து மூர்க்கத்தனமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

உயர் நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்க – மக்களுக்குத் தாமதமின்றி நீதி கிடைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை இப்படி சகட்டுமேனிக்கு மத்திய பாஜக அரசு கலைத்துக்கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதிலும் குறிப்பாக – சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்தது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. ஒருபுறம் உர விலையை உயர்த்தி விவசாயிகளுக்கும், இன்னொருபுறம் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்து தமிழகத்திற்கும் மறக்க முடியாத துரோகம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை விவசாயிகளும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்கமாட்டார்கள்.”

இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.