ராமர் கோவில் விவகாரம்: உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை!

டில்லி:

ராமர் கோவில் கட்டுவதற்கு பாராளுமன்றத்தில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் 9-ந்தேதி டில்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கானோர் திரளப் போவதாக விஸ்வ இந்து பரி‌ஷத் அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் பங்குகொள்ள மோட்டார் சைக்கிள்களிலும், லாரிகளிலும் தொண்டர்கள் பெருந்திரளாக டில்லியை சுற்றி வர வலதுசாரி குழுக்கள் திட்டமிட்டுள்ளன. இதனால், வகுப்புவாத கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் தில்லி காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

500-க்கும் மேற்பட்ட பேரணிகள் திட்டமிடப் பட்டுள்ளதாகவும், முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு அருகே பெரும்பாலான பேரணிகள் நடத்தப்பட உள்ளதாகவும் டில்லி போலீசார் தெரிவித்தனர்.

உள்துறை அமைச்சகதிற்கு வந்த தகவல்படி, டில்லியில் சுமார் 2,000 சிறிய மற்றும் பெரிய காலனிகளில் இத்தகைய அணிதிரள்தல் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக, த்ரிபோக்புரியில் “பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும்” என்ற வாசகத்தோடு இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 15 நாட்களில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை கட்டவேண்டும் என்பதை வலியுறுத்த ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறவிருக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி பற்றிய ஆலோசனை கூட்டங்களில் சுமார் 80,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்று வி.எச்.பி. செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவித்தார்.

கடந்த 1992ம் ஆண்டு, டிசம்பர் 6ம் தேதி, வலதுசாரி இந்துத்துவா கும்பலால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வகுப்புவாத வன்முறை வெடித்தது.

“கடந்த மாதத்தில், 150 இடங்களில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. மோட்டார் சைக்கிள் பேரணிகளில் மட்டுமே சுமார் 40,000 பேர் பங்கேற்றிருப்பார்கள். நாங்கள் பொலிஸிலிருந்து அனுமதி பெற்றுள்ளோம். அவர்களும் இந்த பேரணிகளில் எங்களோடு வருகிறார்கள்” என்று பன்சால் கூறினார்.

இருப்பினும், மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருக்கும் ஐந்து மூத்த டில்லி காவல்துறை அதிகாரிகள், தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பேரணிகள் நடத்தப்படுவது தொடர்பாக எந்தவொரு விண்ணப்பமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். மேலும், அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பதால் இந்த குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தயங்கி வருவதாகவும் கூறினர்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், VHP இன் மெகா பேரணிக்கு பெரும் அணிதிரளலை எதிர்பார்ப்பதால், முக்கிய இடங்களில் காவல்துறை ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், முக்கிய பகுதிகளில் சமூக விரோத சக்திகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில், டில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக், அனைத்து மாவட்ட காவல்துறை அணையாளர்களுடன் ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருக்கும் பேரணி தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.