சென்னை:

மிழகத்துக்குள் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தைச்சேர்நத 6 பேர் ஊடுருவி உள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய புலனாய்வுத்துறை தமிழகஅரசு தெரிவித்துள்ள அவசர தகவலில்,  லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்துக்குள் கடல்வழியாக ஊடுருவி, கோவையில் முகாமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவர்கள் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், இதன் காரணமாக   மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து முக்கியமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.  கோவையில்,  விமான நிலையம், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள் ஆகியவற்றிலும், பொது இடங்களிலும் மோப்ப நாய்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் மிகத் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா. மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமார், நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊடுருவிய தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக கோவை மாவட்டம் இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டுப்பாளையம் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தபட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

மேலும் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள், அங்கிருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் என அனைத்தையும், மேட்டுப்பாளையம் ஆற்றுப் பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிரமாக சோதனையிடுகின்றனர்.

மோப்ப நாய்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தபட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட போலீசார் மேட்டுப்பாளையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கோவை மாவட்டம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.