கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை: கோபாலபுரம் பகுதியில் போலீஸ் குவிப்பு

சென்னை:

டல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே  தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் திமுக தலைவர் கருணாநிதி வசித்து வரும் கோபாலபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு வருகின்றனர்.  பல இடங்களில் தடுப்புகளும் போடப்பட்டுள்ளன.

சிறுநீரக நோய் தோற்று மற்றும் காய்ச்சல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் நலம் விசாரித்தார். மேலும் தமிழகத்தின் அனைத்துகட்சி தலைவர்களும் கோபாலபுரம் விரைந்து வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து  விசாரித்து வருகின்றனர்.

மேலும், கருணாநிதியின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்ததும் திமுக தொண்டர்கள் நேற்று இரவு முதலே கோபாலபுரம் பகுதியில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கோபாலபுரத்திற்கு செல்லும் சாலைகளை இரும்பு தடுப்புகளை கொண்டு தடுத்து போக்குவரத்து சீராக செல்ல காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால், கருணாநிதி வீட்டை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள னர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள் கோபாலபுரத்தில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக  கோபாலபுரம் இல்லத்தை சுற்றிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.