Random image

கலப்புமண தம்பதிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.2½ லட்சமாக உயர்வு: நாராயணசாமி அசத்தல் அறிவிப்பு

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்துகொள்ளும்  தம்பதியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை  ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2½ லட்சமாக உயர்த்தி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான மாநில அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கலப்பு மணம் செய்யும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்கப் படும் என பட்ஜெட் உரையில் முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்த நிலையில், தற்போது  ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதை   இரண்டரை லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்பு திருமண ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்து- ஆதிதிராவிடர் இந்து- ஆதிதிராவிடர் அல்லாதாருடன் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருந்தார்.

அதன்படி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் ஒப்புதலோடு கவர்னர் கிரண்பேடி 14.9.2017 முதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி யர்களுக்கு கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ. 2½ லட்சமாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி அரசாணை எண். 02/2018-19 Wel(SCW), 07.09.2018 வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.