புதுச்சேரி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில், நிதி ஒதுக்கீட்டுக்காக  இடைக்கால பட்ஜெட் தாக்கம் செய்யும் வகையில்வரும் 30ந்தேதி சட்டமன்றம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரியில் மார்ச் மாதம் இறுதியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சில ஆண்டுகளாக புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருவதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

அதுபோல, ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் வரும் 30ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தை விரைந்து முடிக்கவும்,  மிகக்குறைந்த நேரம் மட்டுமே நடைபெறவுள்ள பேரவை கூட்டத்தில் பேரவைக்குள் உள்ளேயும், வெளியேவும் பல புதிய கட்டுப்பாடுகளை விதிக்க சட்டப்பேரவை நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சட்டப்பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் ,  புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டம் வரும் 30 ந்தேதி காலை 9.30 க்கு கூடவுள்ளதாக  தெரிவித்து உள்ளார்.