டில்லி,

மிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்ற  மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள்  கொண்டுவர வேண்டும் என குமரி மகா சபா அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்பட்டு வரும்போது, அரசு எதிர்ப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போது தமிழக அரசு சார்பாக வாதிடும்போது, நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட மாட்டாது என்றும், தமிழக அரசின் மாநில கொள்கையில் இரு மொழி பாடத்திட்டங்கள் இருப்பதால் நவோதயா பள்ளிகள் கொண்டு வந்தால் மாநில அரசின் கொள்கை பாதிக்கும் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, நவோதயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் என்று உறுதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த செப்டம்பர் மாதம் 11ந்தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழகத்தில்  நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய கால அவகாசம் வேண்டும் என்று  குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, மதுரை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து  மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.