துப்புரவுப் பணியாளர்களை இழிவு படுத்திய ஆசிரியர்கள்!: புரட்சி தமிழகம் ஏர்போர்ட் மூர்த்தி கண்டனம்

துப்புரவுப் பணியாளர்களை போராட்டம் என்ற பெயரில் இடை நிலை ஆசிரியர்கள் இழிவு செய்துவிட்டதாக புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 2009-ம் வருடத்துக்குப் பிறகு பணி நியமனம் பெற்றவர்களுக்கு குறைவான சம்பளமும், அதற்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சம்பளமும் வழங்கப்படுகிறது என்றும் இந்த ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று வலியுறுத்தியும் இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினர்  போராடத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டம் குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:-

2009-ம் ஆண்டு மே மாதம் நாங்கள் பணிக்கு சேர்ந்த போது ரூ.9,450 சம்பளம் கிடைத்தது. தற்போது ரூ.23 ஆயிரம் வாங்குகிறோம். 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிக்கு சேர்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எங்களை விட இரு மடங்கு சம்பளம் பெறுகிறார்கள்.

ஒரே கல்விதகுதி, ஒரே பணியில் உள்ள இந்த ஊதிய முரண்பாட்டால் 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்,‘‘சமவேலைக்கு சம ஊதியம்’’ என்ற முழக்கத்துடன்  சென்னை தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள டி.பி.ஐ. வளாகம் முன்  நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த 24-ந்தேதி குவிந்தனர்.

அவர்கள் சட்ட விரோதமாக கூடியதாக கூறி  காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு  கொண்டு வந்தனர்.  அங்கு ஆசிரியர்கள்  உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

மைதானத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் அவர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத அங்கு தொடர்ந்து 6 நாட்களாக நாளாக உண்ணாவிரதம் இருந்தார்கள். . வெட்ட வெளியில் மரத்தடியிலும் ஆங்காங்கேயும் அமர்ந்தும், படுத்துக் கொண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

இதுவரை மொத்தம் 210 ஆசிரியர்- ஆசிரியைகள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கோரிக்கைகள் குறித்து ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து ஆறு நாள் போராட்டம்  திரும்ப்பெறப்  பெறப்பட்டது.

ஏர்போர்ட் மூர்த்தி

இதற்கிடையே ஆசிரியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு நிகரான ஊதியம்தான்  தங்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக 5 ஆம் நாள் போராட்டத்தின் போது துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  துடைப்பத்தை வைத்து டி.பி.ஐ. வளாகத்தை சுத்தம் செய்தனர்.

இதற்கு புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையுடன்  இடைநிலை ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கான அடிப்படை சம்பளம்தான் தங்களுக்கு வழங்கப்படுகிறது  என்பதை வெளிப்படுத்தும் வகையில் போராட்டத்தின் ஐந்தாம் நாள் டி.பி.ஐ. வளாகத்தை  துடைப்பங்கள் கொண்டு  தூய்ப்படுத்துவது போல போராட்டம் நடத்தி உள்ளனர்.

தூய்மைப்பணி செய்யும் மக்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.  அந்த அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சூழலில்தான் இடை நிலை ஆசிரியர்கள் வாழ்க்கை நடத்துகிறார்களா?  நூதன போராட்டம் என்ற பெயரில் பட்டியலின மக்களை அவமதித்திருக்கிறார்கள்.

தூய்மை செய்கிறோம் என்பவர்கள் சென்னை மாநகரத்தில் ஓடும் பாதாள சாக்கடைகளை தூய்மை செய்ய தயாரா?  இதுபோன்ற செய்கைகளை விடுத்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள வேறு யுக்திகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும்” என்று ஏர்போர்ட் மூர்த்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.