அகமதாபாத்:

குஜராத் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி காரணமாக பாஜக குடும்ப அரசியலில் குடுமிப்பிடி சண்டை நடக்கிறது.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு உட்கட்சி மோதலை சந்தித்து வருகிறது பாஜக. பன்ச்மஹால் லோக்சபா உறுப்பினர் பிரபாத்சின் சவுகான் தனது 2வது மனைவி ரங்கேஸ்வரிக்கு காலோல் தொகுதியில் சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சி மேலிடம் அதை நிராகரித்துவிட்டு, பிரபாத்சின்னின் முதல் மனைவிக்குப் பிறந்த பிரவீன்சின் மனைவி சுமனுக்கு சீட் கொடுத்தது.

இதனால் பிரபாத்தும், ரங்கேஸ்வரியும் கோபமடைந்துள்ளனர். தனக்கு சீட் மறுக்கப்பட்டது குறித்து ரங்கேஸ்வரி சவுகான் பேஸ்புக்கில் காரசாரமாக எழுதியுள்ளார். அதில், ‘‘சாராய வாசனையே இல்லாத குஜராத்தில் கள்ளச்சாராயத்தை விற்றுப் பிழைத்து வருபவர்கள் பிரவீனும், அவரது மனைவி சுமனும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், ‘‘பிரவீனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீ உண்மையிலேயே உன் அம்மாவிடம் பால் குடித்திருந்தால், காலோல் தொகுதியில் மோதிப் பார். பகிரங்கமாக சவால் விடுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘பிரவீன் ஒரு கள்ளச்சாராய வியாபாரி. அவரது மனைவி முன்பு காங்கிரஸில் இருந்தார். இப்போது பாஜக வந்துள்ளார். வந்ததுமே சீட் வாங்கிவிட்டார். இவர்கள் மக்கள் எப்படி மதிப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். ரங்கேஸ்வரி. தனது மனைவிக்கு சீட் தராமல் புறக்கணிக்கப்பட்டதால் பிரபாத்சின் சவுகான், தனது எம்பி தொகுதிக்குட்பட்ட 7 சட்டசபைத் தொகுதிகளிலும் உள்ளடி வேலை பார்த்து பாஜகவைக் கவிழ்க்க முயற்சிப்பார் என்பதால் பாஜக கலக்கம் அடைந்துள்ளது.