கனிமொழிக்கு எதிராக திமுகவில் உட்கட்சி பூசல்: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக, அக்கட்சியில் உட்கட்சி பூசல் நிகழ்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, வாணியம்பாடியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி சண்முகம் தான் வெற்றி பெற போகிறார். இதை திமுக நன்கு உணர்ந்துவிட்டதன் காரணமாக தான், சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல நாடகம் ஆடி வருகிறது. திமுகவிலேயே நன்கு பேசக்கூடிய நபர் கனிமொழி. அவரை வேலூர் தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சிலர் தடுத்து வருகின்றனர். இதற்காக ஸ்டாலினிடம் சிலர் மல்லுக்கட்டி வருகின்றனர். திமுகவில், கருணாநிதியின் மகளான கனிமொழிக்கு எதிராகவே உட்கட்சி பூசல்கள் இருக்கிறது. அது விரைவில் வெடிக்கும்.

கனிமொழிக்கு எதிராகவே இத்தகைய பூசல்கள் இருக்குமெனில், திமுக வென்றால் அது உட்கட்சி பூசலை சரி செய்யுமா ? மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா ?” என்று கேள்வி எழுப்பினார்.