வாழப்பாடி அருகே 13 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமான முறையில் சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் தரப்பில், புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகளவில் எத்தனை விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தொடர், ஒருநாள் , 20-20 என, எந்த போட்டியாக இருந்தாலும், உள்ளூர் முதல் சர்வதேச போட்டி வரை அனைத்து போட்டிகளுக்கும் ரசிகர்களின் வரவேற்பும் ஆரவாரத்திற்கும் குறைவிருக்காது. வயது வித்தியாசமின்றி பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி பார்க்கும் விளையாட்டாக கிரிக்கெட் விளங்கிறது என்றால் இது மிகையல்ல. இத்தகைய வரவேற்பு மிகுந்த சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை, இனி வருங்காலங்களில் சேலத்திற்கு அருகிலேயே நேரில் காணும் வாய்ப்பு கிடைக்குமென்ற தகவல், சேலம் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலில், கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட10 பேர் கொண்ட குழுவினர் இணைந்து சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் என்ற பெயரில், சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளனர். சேலத்தில் இருந்து 25 கி.மீ துாரத்தில் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தில், மைக்ரோ ஸ்டேஷன் பேருந்து நிறுத்தம் அருகே, சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் துாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியான சூழலில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மைதானத்தில் தற்போது கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளது. 14 வயதுக்குட்பட்ட மாநில அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான பயிற்சி கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடைபெற்று வருகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்களும், வீரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள நாமக்கல்,கரூர், திருச்சி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை, பகுதிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் இந்த மைதானத்திற்கு தற்போது படையெடுத்து வருகின்றனர். மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் முயற்சியால், கிரிக்கெட் வரலாற்றில் சேலத்திற்கு இதனால் முக்கிய இடம் கிடைத்துள்ளது பாராட்டுக்குறியதாகும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி, “சேலம் மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அதிகம். சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வாயிலாக ஆண்டு தோறும் அனைத்து நிலைகளிலும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள், இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சிறந்த வீரர்களை உருவாக்கி வருகிறோம். சேலம் மாவட்டத்தில் சர்வதேச அளவில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்பது சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலில் சேலம் கிரிக்கெட் பவுன்டேஷன் சார்பில் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் சர்வதேச தரத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தை சுற்றிலும் பார்வையாளர்களுக்கான கேலரி இருக்கைகள் அமைக்கவும், அனைத்து நவீன வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளை சேலத்திலுள்ள ரசிகர்களும் நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.