உத்திரப் பிரதேசம் : பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் கைது
பகராய்ச், உத்திரப் பிரதேசம்
சர்வதேச கோல்ஃப் விளையாட்டு சாம்பியன் ஜோதி ரந்தாவா மோதிப்பூர் வனத்தில் அனுமதியின்றி வேட்டையாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஜோதி ரந்தாவா சர்வதேச அளவில் கோல்ஃப் விளையாட்டு சாம்பியன் ஆவார். ராணுவ வீரனின் மகனான ரந்தாவா உத்திரப் பிரதேச மாநிலம் லகிம்புர் கேரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1994 ஆம் ஆண்டு இவர் சர்வதேச கோல்ஃப் போட்டிகளில் கலந்துக் கொள்ள தொடங்கினார்.
ஜோதி ரந்தாவா அதில் இருந்து பல போட்டிகளில் வெற்றி வாகை சூடி உள்ளார். அவர் ஹீரோ ஹோண்டா மாஸ்டர், வில்ஸ் இந்தியன் ஒப்பன் கோல்ஃப் போட்டி, சிங்கப்பூர் ஓப்பன் கோல்ஃப் போட்டி, வால்வோ மாஸ்டர்ஸ் ஆஃப் ஆசியா, சிங்கா தாய்லாந்து ஓப்பன் கோல்ஃப் ஆகிய போட்டிகளில் கலந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

பாலிவுட் நடிகையன சித்ராங்கதா சிங் என்பவரை மணம் புரிந்த ரந்தாவா 2014 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். தற்போது 46 வயதாகும் இவர் டில்லிக்கு அருகில் உள்ள குர்காவ் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக இவர் துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் அனுமதியின்றி உத்திரப் பிரதேச மாநிலம் மோதிப்பூர் வனப்பகுதியில் வேட்டையாடி உள்ளார். அதை ஒட்டி வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் வேட்டையாட சென்ற மகேஷ் விராஜ்தார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து ஒரு கார், வேட்டைக்குப் பயன்படுத்திய துப்பாகி மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.