நாளை சர்வதேச யோகா தினம்: ஐ.நா.வில் பிரம்மாண்ட ஏற்பாடு

நியூயார்க்:

நாளை உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அமெரிக்காவில் உள்ள ஐ.நா.சபையில், சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாரதியஜனதா தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றதும், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில்  உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர்  மோடி பேசும்போது, யோகாவின் பெருமைகள் குறித்தும், அதை சர்வதேச அளவில் கடைபிடிக்க வலியுறுத்தும் வகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறினார்.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா. சபையில் அமைக்கப்பட்டுள்ள யோகா ஒளிவிளக்கு

அதைத்தொடர்ந்து, ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது.  ஐ.நா.வின் அறிவிப்பை பின்பற்றி  உலக நாடுகளில்  யோகாசனம்  குறித்த விழப்புணர்வு ஏற்பட்டு  முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நாளை கொண்டாடப்பட உள்ள   சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் யோகா தினத்தை கொண்டாடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஐ.நா. கட்டிடத்தின் மீது,  மின்சார ஒளியில் யோகா குறித்த படம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாளை யோகா பயிற்சிகள் மற்றும் அதுகுறித்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை  ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பருதீன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.