சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 18000 அடி உயரத்தில் இந்திய ராணுவத்தினர் யோகா பயிற்சி

18ஆயிரம் அடி உயரமான லடாக் பகுதியில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்

ஸ்ரீநகர்:

ன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஐ.நா. சபையில் யோகா குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியா முழுவதும் இன்று யோகா தினம் வெகுசிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் 18ஆயிரம் உயரத்தில் எல்லை பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று யோகா செய்து சிறப்பித்தனர். அதுபோல கப்பல் படையினர், திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் யோகா பயிற்சி மேற்கொண்டு சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர்.

பிரதமர் மோடி உத்தரகாண்டில் யோகா பயிற்சி மேற்கொண்டார். அவருடன் ஏராளமானோர் யோகா  செய்தனர். அதுபோல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் உள்பட பள்ளி, கல்லூரிகளிலும் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

18ஆயிரம் அடி உயரமான லடாக் பகுதியில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்

இந்த நிலையில், இந்திய-திபெத் எல்லையான லடாக் பகுதியில் 18,000 அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை  பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிர் பகுதியான லடாக்கில், குளிரை பொருட்படுத்தாது  எல்லை பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

சியாச்சின் மலைப்பகுதி யில் ராணுவத்தினருக்கு பிரபல யோகா குருவான ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாட்களாக யோகா பயிற்சி அளித்த நிலையில், இன்று வீரர்கள் அனைவரும் யோகா செய்து சர்வதேச யோகா தினத்தை பெருமைப்படுத்தினர்.

மும்பை துறைமுகத்தில் ஐஎன்எஸ் விராத் போர்க் கப்பலிலும் கடற்படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

கப்பலில் யோகா செய்யும் கடற்படை வீரர்கள் – வீராங்கனைகள்

விசாகப்பட்டிணத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் உள்ள ஐ.எஸ்.எஸ்.ஜோதி கப்பலில்  கட்டளைத் தளபதி தலைமையில் வீரர்கள்  யோகா செய்தனர். இந்த யோகாவில்  கடற்படை தளத்தின் நீர்மூழ்கிக் கப்பல் ஊழியர்களும் பங்கு பெற்றனர். அதுபோல கொச்சி துறைமுகத்திலும் ஐஎன்எஸ் ஜமுனா  கப்பலிலும் கப்பல்படை வீரர்கள்  யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

தண்ணீரில் யோகா செய்யும் ராணுவ வீரர்கள்

இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையினர், லோகிப்பூர் பகுதியில் திகாரு ஆற்றில் இறங்கி  ‘யோகா’  பயிற்சி செய்தனர்.

இதுபோல நாடு முழுவதும் ராணுவ வீரர்கள் மட்டுமல்லாது காவல்துறையினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் யோகா செய்து, இன்றைய சர்வதேச யோகா தினத்தை சிறப்பித்து வருகின்றனர்.