ராஞ்சி:

ர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா என்று பெருமிதமாக கூறினார்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று கடந்த  2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஜூன் 21-ம் தேதியை ஐ.நா. சர்வதேச யோகா தினமாக அறிவித்து ஆண்டுதோறும்  உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

யோகா தினத்தையட்டி நாடு முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் இன்று கட்டாயம் யோகா செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். அவருடன் சுமார்  40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய மோடி,   உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா, யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது என்று பெருமிதமாக கூறினார்.

யோகா நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றவர், நமது நல்வாழ்வுக்கான திறவுகோல் யோகா  என்று  பெருமையை கூறிய  பிரதமர் மோடி, உலக அமைதிக்கு யோகா முக்கிய பங்காற்றுகிறது என்றும், தெரிவித்தார். யோகாவிற்கும் உடல்நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது யோகாவின் பலன் ஏழை மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து மைதானத்திற்கு சென்ற பிரதமர்  யோகா பயிற்சியில், ஈடுபட்டார்.

முன்னதாக  நேற்று இரவே ராஞ்சிக்கு சென்று கவர்னர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 6 மணிக்கு அவர் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகாசனம் செய்தார். அவருடன் மேடையில் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ரகுபர்தாஸ், கவர்னர் திரவுபதி முர்மு, மத்திய ஆயுஷ் மந்திரி யெஸ்ஸோ நாயக், மாநில சுகாதார மந்திரி ராமச்சந்திர சந்திரவன்ஷி ஆகியோரும் பங்கேற்றனர்.

யோகா நிகழ்ச்சியை தொடர்ந்து அங்கு  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், தேவையான அடிப்படை வசதிகளும் மாநில அரசால் செய்யப்பட்டிருந்தது. மேலும்,  நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப 28 பெரிய திரைகளும் வைக்கப்பட்டுள்ளன.