குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : திரிபுராவில் இணையம் மற்றும் எஸ் எம் எஸ் தடை

கர்தலா

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக உள்ள திரிபுரா மாநிலத்தில் இணையம் மற்றும் குறுந்தகவலுக்கு 48 மணி நேர தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எல்லைப்புற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உள்ளது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்ட திருத்த மசோதாவினால் ஒரு சில குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டும் பாதிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. எனவே குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதை ஒட்டி கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் நேற்று முழு கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. இதற்கு வடகிழக்கு இந்திய மாணவர் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் ஆதரவு அளித்தன. பல இடங்களில் சாலைகளில் தடை எழுப்பப்பட்டதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரிபுரா அரசின் கூடுதல் செயலர் சாரதிந்து சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன. அத்துடன் இணையம் மூலம் இத்தகைய புகைப்படங்கள் பரவுவதாக் மக்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் பல தகவல்கள் பொய்யானவை ஆகும்.

பொய்த் தகவல் பரவி மக்களிடையே அச்சம் உண்டாவதை தடுக்க மாநிலத்தில் இன்னும் 48 மணி நேரத்துக்கு இணையம் மற்றும் மொபைல் சேவைகள் தடை செய்யப்ப்படுகின்றன. இந்த தடை மொபைல் மூலம் பெறப்படும் இணைய சேவை மற்றும் கணினி மூலம் பெறப்படும் இணைய சேவை உடன் எஸ் எம் எஸ் எனப்படும் குறும் செய்திகளுக்கும் பொருந்தும்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 3 மணி முதல் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. அத்துடன் பத்திரிகையாளர்களுக்கும் இந்த இணைய மற்றும் எஸ் எம் எஸ் தடை பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது.

You may have missed