போட்டோ எடுக்காமலேயே புகழ்பெற்ற போட்டோகிராபர்

டெல்லி:

சிரியாவில் ராணுவத்திற்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக சண்டை நடந்து வருகிறது. அங்கு சிரிய நாட்டினரை ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பேருந்துகள் மூலம் இடமாற்றம் செய்யும் பணி நடந்தது. இந்த பேருந்துகள் மீது தற்கொலை படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் பல குழந்தைகள் உள்பட 126 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் நடப்பதற்கு முன்பே அந்த பகுதியில் புகைப்படம் எடுக்கும் பணியில் அப்த் அல்காதர் ஹபாக் என்ற போட்டோகிராபர் ஈடுபட்டிருந்தார். குண்டு வெடித்த அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த கேமரா பறந்து சென்றது. கேமராவை தேடும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். ஒரு வழியாக கேமராவை கண்டுபிடித்து எடுத்தார்.

அப்போது குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒரு குழந்தை ரத்த காயங்களுடன் துடித்துக் கொண்டிருந்ததை பார்த்தார். உடனடியா ஓடிச் சென்று அந்த ஆண் குழந்தையை தூக்கி பார்த்தபோது உயிர் இருந்ததை அவர் கண்டுபிடித்தார். அந்த குழந்தை அவரது கையை பற்றி அவரை பார்த்தது. கேமராவை ஒரு கையிலும், குழந்தையை ஒரு கையிலும் தூக்கிக் கொண்டு அவர் ஆம்புலன்ஸ் நோக்கி ஓடினார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

குழந்தையை கேமராவுடன் தூக்கிக் கொண்டு ஓடிய காட்சியை அங்கிருந்த இதர போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோ கிராபர்கள் பதிவு செய்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. லட்சகணக்கானோர் இந்த புகைப்படங்களை ஷேர் செய்தனர். புகைப்படங்களை எடுத்து விருது பெற துடிக்கம் போட்டோகிராபர்கள் மத்தியில் ஹபாக்கின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

இது குறித்து ஹபாக் கூறுகையில்,‘‘ கண் எதிரே பலர் காயங்களுடன் துடித்தனர். சிலர் இறந்து கொண்டிருந்தனர்.அந்த காட்சியை பார்ப்பதற்கே மிகவும் பாவமாக இருந்தது. பின்னர் நானும், எனது சக போட்டோகிராபர்களும் புகைப்படம் எடுப்பதை நிறுத்திவிட்டு மீட்டு பணிகளில் ஈடுபட்டோம்’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி