காஷ்மீர்: மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கம்
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டையடுத்து தொடர்ந்து 3-வது நாளாக மாநிலத்தின் பல பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹவூரா ரெட்வானி கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தில் தீவிர சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல், வன்முறையை தொடர்ந்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு சிறுமி உட்பட 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால் அங்கு பெருமளவு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வதந்தி பரவுவதை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து 3-வது நாளாக இணையதள சேவை முடக்கப்பட்டு இருக்கிறது. ஸ்ரீநகர், குப்வாரா, பண்டிபோரா, பாரமுல்லா மற்றும் பட்காம் போன்ற பல பகுதிகளிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.