தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் வன்முறை துப்பாக்கி சூடு காரணமாக, வதந்திகள் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில்  இணைய தள சேவையை தமிழக அரசு முடக்கி வைத்தது.

தற்போது ஓரளவு சகஜ நிலை திரும்பிய உள்ள நிலையில், இன்று போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் பெரும்பாலான வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் அன்றாட தொழிலை கவனிக்க தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையில், இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று மாலையே நெல்லை, குமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்ட  இணையதள சேவை மீண்டும் உயிர்ப்பித்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் 100 சதவீதம் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகிறது என்று கூறினார்.

இதன் காரணமாக . இன்றுக்குள் இணையதள சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கூறி உள்ளார்.