இன்டர்போல் தலைமை அதிகாரி சினாவில் கைது – லஞ்சம் பெற்றதால் விசாரணை என தகவல்

இன்டர்போலின் தலைமை அதிகாரியான மெங் ஹாங்வே சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் பெற்றதாக மெங் ஹாங்வே ஒப்புக்கொண்டதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

interpol_630_630

சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் உள்ளது. இதன் தலைவராக மெங் ஹாங்வே பதவி வகித்து வந்தார். லயோன் நகரில் வசித்து வந்த அவர் செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை.

இதுதொடர்பாக அவரது மனைவி புகார் அளித்தார். இதனை இண்டர்போல் விசாரணை செய்து வந்தது. இந்தநிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெங்க் ஹாங்வே கடந்த மாதம் சீனா சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை சீன போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். எதற்காக அவரிடம் விசாரணை நடைபெறுகிறது, எந்த இடத்தில் விசாரணை நடைபெறுகிறது என்ற எந்த விவரத்தையும் சீன அரசு வெளியிடவில்லை.

மெங் ஹாங்வே சீனாவைச் சேர்ந்தவர். அந்நாட்டின் துணை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்தவர். இந்த நிலையில் தான் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சீனாவின் சட்ட விதிகளை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மெங் ஹாங்வே லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்டதாக சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில், இண்டர்போல் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக மெங் ஹாங்வே அறிவித்துள்ளார்.