IMG-20160501-WA0020
காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவான ஐ.என்.டி.யூ.சியின் தமிழக தலைவர் காளன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ““காங்கிரஸில் ஐ.என்.டி.யூ.சி.க்கு உரிய அங்கீகாரம் தரப்படுவதில்லை. கட்ச நிர்வாகக் கூட்டம் நடைபெறும்போதும், மகிளா காங்கிரஸ் உட்பட பிற பிரிவுகளை அழைக்கும் தலைமை, ஐ.என்.டி.யூ.சி. பிரதிநிதிகளை அழைப்பதில்லை. இந்தத் தேர்தலிலும் ஐ.என். டி.யூ.சி.க்கு சீட் தரவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, “தமிழக ஐ.என்.டி.யூ.சி. துணைத் தலைவர் விஷ்ணு பிரசாத்துக்கு சீட் தரப்பட்டுள்ளது. காளன், தனக்கு சீட் தரப்படவில்லை என்பதாலேயே வருத்தப்படுகிறார். கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வில்லிவாக்கம் தொகுதியில் சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் தோற்றார்” என்று ஒரு தரப்பு கூறுகிறது.
அதே நேரம் நடுநிலையான காங்கிரஸ்காரர்கள் தரப்பில் விசாரித்தபோது, “காளன், தனது சொந்த சோகத்தால் காங்கிரஸைவிட்டு சென்றுவிட்டார் என்பது உண்மைதான். அதே நேரம் தமிழக காங்கிரஸில் ஐ.என்.டி.யூசி. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதும் உண்மையே.
மகிளா காங்கிரஸ், சேவாதளம் போன்ற கட்சி உட்பிரிவுகளைவிட ஐ.என்.டி.யூ.சியில் ஆக்டிவான உறுப்பினர்கள் அதிகம் உண்டு.  ஆனால் இந்த பிரிவை மாநில கட்சி தலைமைகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றன.
இந்த நேரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியை நினைவுகூறவேண்டியது அவசியம். அவர் ஐ.என்.டி.யூ.சியில் இருந்து வந்தவர். கட்சிக் கூட்டங்களில் ஐ.என்.டி.யூ.சிக்கு உரிய முக்கியத்துவம் அளித்தார். 1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஐ.என்.டி.யூ.சி.யைச் சேர்ந்த பலருக்கு போட்டியிட வாய்ப்பும் அளித்தார். அவருக்குப் பிறகு தலைவராக வந்தவர்கள் இந்த பிரிவை கண்டுகொள்ளவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் ஐ.என்டி.யூ.சி.யின் அகில  இந்திய மாநாடு நடந்தது. அப்போது இப் பிரிவின்  அகில இந்திய தலைவர் சஞ்சீவ்ரெட்டி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்  ஐ.என்.டி.யூ.சி.க்கு உரிய சீட் வழங்கப்படும் என்றார்.  அந்த கூட்டத்துக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இதை ஆமோதித்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை” என்கிறார்கள் நடுநிலை காங்கிரஸ்கட்சியினர்.