தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு! மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

சென்னை,

சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் 2.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட இருப்பதாக கூறினார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை, கப்பல்கள் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னை காமராஜர் துறைமுகத்தில் கண்டெய்னர் டெர்மினல் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட இருப்பதாக கூறிய அவர் இதன் காரணமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் கூறி உள்ளார்.

தமிழகத்தில், ஆட்டோமொபைல் துறை முன்னிலையில் உள்ளது. தற்போது, இந்த துறையில் 4.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.  இதுவரும் காலத்தில் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். 2020ல் தமிழகம் ஆட்டோமொபைல் துறையில் முக்கிய இடம் வகிக்கும்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் அமையும் துறைமுகத்திற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும், இதன் காரணமாக மீனவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும், துறைமுகத்தில் மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அவருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமமின் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கண்டெய்னர் டெர்மினலை மோடியின் நண்பரான அதானி நிறுவனத்தினரால்  ரூ.1270 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.