வெள்ளை மாளிகையை தேர்தல் பிரச்சார தளமாக பயன்படுத்தினாரா டிரம்ப்? – தொடங்கியது விசாரணை!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான வெள்ளை மாளிகையை, தேர்தலுக்கான பிரச்சார தளமாகப் பயன்படுத்தியதாக தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க சிறப்பு ஆலோசகர், இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையை தேர்தல் நாள் கட்டளை மையமாக, அதிபரின் தரப்பு பயன்படுத்தி, அதன்மூலமாக கூட்டாட்சி சட்டத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கியுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி பில் பாஸ்ரெல் தெரிவித்தார்.

குற்றச்சாட்டின்படி, தேர்தல் முடிவுகளை வெள்ளை மாளிகையில் தனது அறையிலிருந்து டிரம்ப் கண்காணித்தார் என்றும், பின்னர், வெள்ளை மாளிகையில் திரண்ட தனது ஆதரவாளர்களை கிழக்கு அறையில் சந்தித்தார் என்றும், எனவே இது அப்பட்டமான சட்ட மீறல் என்றும்  அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணையை ஹென்றி கெர்னர் என்ற சிறப்பு ஆலோசகர் விசாரிக்கிறார். கடந்த 1939ம் ஆண்டு சட்டப்படி, வெள்ளை மாளிகையானது, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய இருவரைத் தவிர, ஃபெடரல் பணியாளர்களுக்கு, அந்த இடத்தில் செயல்படுவதற்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.