மும்பை: கடந்த 6 வர்த்தக நாட்களில் மட்டும், இந்தியப் பங்கு சந்தைகளில், முதலீட்டாளர்கள் ரூ.11.31 லட்சம் கோடிகளை இழந்துள்ளனர் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

‍நேற்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.95 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,115 புள்ளிகள் சரிந்தது.

உலகளவிலான சந்தைகளில் குறுகிய காலத்தில் அதிகப் பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அவற்றின் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்றைய வர்த்தகத்தில், 1,114.82 புள்ளிகள் சரிந்து 36,553.60 புள்ளிகளுக்கு கீழிறங்கியது.

இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 326.30 புள்ளிகள் சரிவைக் கண்டு, வர்த்தகத்தின் முடிவில் 10,805.55 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் பிரிவில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தவிர, மீதி அனைத்துப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. இதில், இண்டஸ்இண்ட் பேங்க் பங்குகள் அதிக விலை சரிவை சந்தித்தன. இந்நிறுவன பங்குகள் விலை, 7% அளவுக்கு சரிவைக் கண்டன.