சிதம்பரத்துக்கு ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுங்கள்! உச்சநீதி மன்றம்

டில்லி:

சிதம்பரத்துக்கு ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று  உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சிதம்பரம் கைது செய்யப்பட்டு 5 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீது இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை பட்டியலில் இடம்பெறாததால், அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறவில்லை. இதை சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கபில்சிபலும் உறுதி செய்தார்.

இது தொடர்பான வழக்கில்,முன்ஜாமீன் ரத்துக்கு எதிரான மனுவை ஜாமீன் வழங்க கோரும் மனுவாக கருத முடியாது என்றும் நீதிபதி பானுமதி அறிவித்த நிலையில்,  அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

உயர் நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் என்ன உள்ளது என்றே தெரியாத போது அது குறித்து எப்படி வாதிட முடியும் என்று ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி எழுப்பினார்.

சிதம்பரத்தின் பெயரில் உள்ள ஒரு சொத்தை காட்டினாலும் மனுவை திரும்ப பெற்று கொள் கிறோம் என்றும், மின்னஞ்சல்கள், சொத்துக்களை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறார், ஆனால் இது குறித்து கடந் 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள்  என்பது குறித்து  அமலாக்கத்துறை விளக்க வேண்டும்  என்றார். மேலும், இது தொடர்பாக அவர்களால்  நீதிமன்றத்திற்கு எந்த ஆவணத்தையும் கொடுக்கவோ காட்டவோ இருக்க முடியாது என்றவர், அதைப் பார்க்க எனக்கு உரிமை இல்லை என்கிறார்கள், ஆனால்,  அதை ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

அதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி பானுமதி,  சிபிஐ முதல் தகவல் அறிக்கையை தவிர்த்து வேறு என்ன ஆவணங்கள் சிதம்பரத்திற்கு எதிராக உள்ளன?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து ஆஜரான அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா,  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தப்பிக்க நினைக்கிறார். சிதம்பரத்திடம் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கேட்டு விசாரணை நீதி மன்றத்தை அணுகுங்கள் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக ச.சிதம்பரம் மீதான அமலாக்கத்துறை வழக்கில், உச்சநீதி மன்றம் எந்தவித முடிவும் எடுக்காத நிலை தொடர்கிறது.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, டில்லி ரவுஸ் அவென்யூவில் உள்ள  சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்கிறார்.