ப.சிதம்பரத்துக்கு 26ந்தேதி வரை சிபிஐ காவல்! நீதிமன்றம் உத்தரவு

டில்லி:

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு வரும்  26ந்தேதி (திங்கட்கிழமை) வரை சிபிஐ  காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து அவரது வழக்கு தொடர்பாக விசாரணை பரபரப்பாக நடைபெற்றது. சிபிஐ தரப்பில் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், ப.சிதம்பரம் தரப்பில் பிரபல வழக்கறிஞர்கள், கபில்சிபல், அபிசேக் மனு சிங்வியும் வாதாடினார்.

அப்போது, ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக  நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிதம்பரம் பேச நீதிபதி அனுமதி வழங்கினார்.

அப்போது,. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன் என்றவர், சிபிஐ அதிகாரிகள், என்னிடம்  வெளிநாட்டு வங்கிகளில் எனக்கு கணக்கு உள்ளதாக என்று கேள்வி எழுப்பினார், அதற்கு, எனக்கு கணக்கு  இல்லை.. மகனுக்கு மட்டுமே கணக்குகள் உள்ளது என்று கூறியதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அடுத்த அரை மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து மாலை 6.35 மணி அளவில்  தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ப.சிதம்பரத்தை வரும் 26ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், தினசரி அரை மணி நேரம், அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.