சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, மிழகம் முழுவதும் பல்வேறு போராட் டங்கள் நடைபெற்று வரும்  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னையில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழர்களின் எதிர்ப்பை மீறி போராட்டம் நடத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று ஒருசில அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி போட்டியை நடத்துவோம் என்று முரண்டு பிடித்து இன்று போட்டியை நடத்துகின்றனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான கிரிக்கெட் போட்டி   நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டன.

தமிழகத்தில் காவிரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் நிர்வாகம் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

போட்டியை காணவரும் ரசிகர்கள் பலவித சோதனைகளுக்கு பின்பே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கருப்பு சட்டை அணியக்கூடாது, பைகள், தோல்பைகள், சூட்கேஸ்கள் போன்ற எந்தவிதமான பைகளை யும் கொண்டு செல்லக்கூடாது என்றும்,  செல்போன்கள், ரேடியோ, கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், ரிமோட் மூலம் இயங்கும் கருவிகள், ரிமோட் மூலம் இயங்கும் கார் சாவிகள் உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கண்ணாடி பொருட்கள், கத்திகள், கத்தரிக்கோல் போன்ற அனைத்து விதமான ஆயுதங்களும் எடுத்து செல்லக்கூடாது.  வீடியோ கேமராக்கள், பைனாகுலர், ஆடியோ பதிவு செய்யும் கருவிகள், இசை சம்பந்தமான கருவிகள் போன்ற எதனையும் எடுத்து செல்லக்கூடாது  என்றும்,  சிகரெட்டுகள், பீடிகள், தீப்பெட்டிகள், வெடிபொருட்கள், பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கும் அனுமதி இல்லை.

தெர்மாகோல் அட்டைகள், தண்ணீர் பாட்டில்கள், கருப்பு நிறத்திலான கைக்குட்டைகள், கருப்பு கொடி கள், கருப்பு துணிகள் போன்றவையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்றும்,  குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் எந்த செயலும் செய்யக்கூடாது. போட்டி நடைபெறும்போது சட்ட விரோத செயல்கள், வன் முறைகளில் ஈடுபட்டாலும், இன வெறியை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பினாலும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்து உள்ளனர்.

இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய இரவு போட்டியை காண ரசிகர்கள் வருவார்களா என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

மேலும், தமிழக அரசியல் கட்சியினரின் எதிர்ப்பை மீறி இன்று போட்டியை காண செல்பவர்கள் இரவு திரும்பும் போது, தாக்குதலுக்கு ஆளாகலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கும், அவர்கள் தங்கி உள்ள விடுதிக்கும் ஆயிரக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா வீரர்கள் அனைவரும், விடுதிக்குள், கைதிகள் போலவே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள் வெளியே ஷாப்பிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கி இருக்கும் ஆழ்வார் பேட்டை கிரவுன் பிளாசா ஓட்டல் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று பயிற்சிக்காக வீரர்கள் தனித்தனி காரில் போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டேடியத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை ஐபிஎல் போட்டிக்காக விடுதியில் தங்கி உள்ள வீரர்களை எப்படி மைதானத்துக்கு அழைத்து வருவது என்பது குறித்து, தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

வீரர்களை  தனித்தனி காரில்  அழைத்து செல்வதா அல்லது வீரர்களுக்கான பேருந்துகளிலேயே பாதுகாப்பாக அழைத்து செல்வதா என்று கிரிக்கெட் வாரியம் காவல்துறையினருடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பில் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கிரிக்கெட் மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் போலீசார் அரண் போல பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் என போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் கமாண்டா படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் இன்று மாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சென்னை அண்ணாசாலையில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் சாலைகள் மூடப்படும் என்றும், திருவல்லிக்கேணி மற்றும் கடற்கரை சாலையில் இருந்து சேப்பாக்கம் செல்லும் சாலைகளும் மூடப்படும் என்றும், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.